வாக்காளர் பட்டியல்

சென்னை : ''தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம், 15ம் தேதி துவங்கும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி மேற்கொள்வது தொடர்பாக, மாவட்டங்களில் பணிபுரியும், தேர்தல் தாசில்தார், முதன்மை பயிற்சியாளர், ஆகியோருக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பயிற்சி முகாம் நடந்தது.

தகுதி நாள் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், இணை தேர்தல் அதிகாரி சிவஞானம், துணை கலெக்டர் ஏலியன் சுனேஜா, ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

அப்போது, பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவதை, தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம், 15ம் தேதி முதல், நவ., 10ம் தேதி வரை நடைபெறும். அப்போது, விண்ணப்பிப்பவர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, புதிய வாக்காளர் பட்டியல், 2015 ஜன., 5ம் தேதி வெளியிடப்படும். புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் விழிப்புணர்வு தினமான, ஜன., 25ம் தேதி முதல் வழங்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, அலுவலர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக, மாவட்டங்களில் பணிபுரியும், தேர்தல் தாசில்தார்கள், முதன்மை பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக, 10 மண்டலங்களில், சட்டசபைத் தொகுதி வாரியாக உள்ள, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அலுவலர், உதவி அலுவலர், ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும். மூன்றாவது கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும்.

வண்ண அடையாள அட்டை : வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். லோக்சபா தேர்தலில், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, இம்மாதம் இறுதியில் வழங்கப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.

சரிபார்க்க : www.elections.tn.gov.in/eroll

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக